Tuesday, November 15, 2016

பொருள் தேடி..




அனைவரும் காரணமின்றி , பல்வேறு காரணங்கொண்டு தேடும் அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது, பணம்!

பழந்தமிழர் காலத்தில் நாணயங்கள், பண்டமாற்று முறைகளில் வணிகம் நடந்தபோது , மக்கள் அனைவரும் அமைதியாக தம் வாழ்நாளினை சீரியமுறைகளில் , கழித்து வாழ்ந்தனர். தற்காலத்தில் கூட, சில பத்து வருடங்களுக்கு முன்னர் கூட.  தொலைக்காட்சிப்பெட்டி ஆடம்பரம் அல்ல எனும் மனநிலை தோன்றும்வரை , வானொலியே  ,,ம்ம்ம் அந்த காலம்...!

இன்று , வேலையும் பணமும் அதிகமே கிடைக்கிறது எல்லோருக்கும்! உழைப்பும் ஊதியமும் மாறுபட்டாலும், வாழ்க்கைத்தரம் வேறுபட்டாலும் , அவர்தம் வேற்றுமை இல்லா ஒரே  செயல் கைபேசியும் கைபேசியில் சமூக வலைத்தள பயன்பாடும்! 

மாய சமூகம் என்பதே சரியெனக்கூறும் அளவுக்கு, செயற்கையான வேடிக்கை வழக்கங்கள், ஆத்ம உணர்வில்லா நட்பின் வெளிப்பாடுகள்! தனி வாழ்வில் எல்லை மீறிய அத்துமீறல்கள்!  மனதை அடக்கி ஆளும் செயல்கள் எல்லாம் சாமான்யனுக்கல்ல அவை எல்லாம் சந்நியாசிகளுக்கே எனும் மன மாச்சரியம் ஊறிவிட்ட புதியதோர் தலைமுறைகளினிடையில் ... மரித்துப்போனது மனித நேயம் மட்டுமல்ல, கடின உழைப்புடன் , நற்சிந்தனைகொண்ட மன அமைதியான நேரிய வாழ்க்கை வாழ்ந்து வந்த தமிழனும் தான்!

அதிவேகம் என்றைக்கும் ஆபத்து என்பதுபோல, இன்றைய விண்ணைத்தொட்ட தொழில்நுட்ப யுகத்தில் , யாவரும் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து, சுயநலம் மிகுந்து தனித் தனித்தீவுகளாக  , அவர்தம் குடும்பத்திற்குள்ளேயே வாழும் அவலம் எங்கும் காண்கிறோம்!

எங்கு போகிறது மானிடம்? சுற்றம் நட்பு சூழ வாழ்ந்த தமிழன் இன்று கைபேசி கணினிமூலம் பல நூறு முகம் தெரியா நண்பர்களுடன் நட்பு கொண்டு , அந்த மாய நட்பு வலையே , உண்மை எனக்கொண்டு திக்கு தெரியாமல் வாழ்ந்து வருகிறான். 

 தோள் கொடுக்கும் தோழனாய், ஆபத்துக்காலங்களில் உயிர்கொடுக்கும் நண்பனாய் , இல்ல விழாக்களில் முன்னின்று  செயல்படும் மூத்தவனாய், நண்பன் இல்லாத நேரங்களில் அவர்தம் குடும்பத்தார்க்கு மகனாய் , அரணாய் விளங்கிய பால்ய நண்பர், பள்ளித்தோழர், குழந்தைப்பருவ நட்பு போல வந்து விளங்குமா, இந்த முகமறியா , முகநூல் மாயை?

இன்று காண்பது எல்லாம் மாயை என எண்ணி, சற்று நேரம் கைபேசிக்கு ஒய்வு கொடுத்துவிட்டு, நிதானமாக இளமைக்கால வாழ்வினை நினைவில் கொண்டுவாருங்கள்.

அன்று இருந்ததும் , இன்று இல்லாததும் நிதர்சனமாகும். மனதை சிதறடிக்க இன்று ஆயிரம் தொழில்நுட்ப சாதனங்கள்! ஆயினும் மனதை அமைதியாக்க எத்தனை சாதனங்கள், இந்த தொழில்நுட்பங்கள் தந்தன?  இனியாவது , தருமா?

எப்படி தரும்? தந்தால் என்னவாகும் என அறியாத வியாபாரிகளா அவர்கள்?

உள்ளுணர்வே அமைதி, வரம் என எண்ணி இருந்திருந்தால் இன்று குப்பையில் அல்லவா அவை எல்லாம் இருக்க வேண்டும்? குறுகிய கால உலக மகா பணக்கார  சுயநல அரக்கர்கள்  எல்லாம் இல்லாது உலகம் நன்றாக இருந்திருக்குமே!


கடலில் மீன் பிடிக்கப்போகிறவர் மீனைப்பற்றியே சிந்திப்பார், கடலில் மூழ்கி முத்தெடுக்க செல்பவர் நல் முத்தையே சிந்திப்பார்!

கடல் அளவு தகவல் நுட்பம் கொண்ட இன்றைய கணினி யுகத்தில் , நாம் தேடுவது என்ன என்று தெரியாமலே , அறியாமலே , தகவல் புரட்சியின் மேல் அடுக்கிலேயே நம் கவனம் சிதறடிக்க , நம்மீது திணிக்கப்பட்ட சிறுபிள்ளைத்தனமான செயல்களிலேயே காலம் கழிக்கிறோம்!

அவையெல்லாமே , நம்மை சுற்றிப்படரும் ஒட்டுண்ணிகள் , சிந்திக்கவிடாமல் ஆதிக்கம் செலுத்தும் களைகள் !  

விழித்திடு தோழனே!  இனி இருக்கும் காலம் வாழ்வோம் பெருமிதமாய்! 
தமிழனாக! 
தரணியெங்கும் தனிப்பெரும் ஆளுமை கொண்ட பாரம்பரிய மனிதனாய்!

நாகரீகத்தின் அடையாளமாய் விளங்கிய பழந்தமிழனாய்!

தேவைகள் எதுவுமின்றி , தனி நலனைவிட , பொது நலனே மேலானது என எளிமையாக வாழ்ந்த முன்னோர் வழியில் இனியாவது வாழ்வோம் ஒருமுறை !  

எளிமையாக வாழ எண்ணம்தான், எனினும் இன்றைய வாழ்வியல் சூழலில் தனிமைப்பட்டு போய்விடுவோமோ எனும் தவறான புரிதலினால் , தடுமாற்றமா ???

நம்மால் முடியாததா? .... சிந்தியுங்கள்!     தடுமாற்றங்கள் விலகி ஓடும்!.... 


மீண்டும் சந்திப்போம்!


ஞானகுமாரன்.



Saturday, October 29, 2016

நல்வாழ்த்துக்கள்!




அன்பர் அனைவருக்கும் 

புத்தொளி மயமான 

தீப ஒளித்திருநாள் 

நல்வாழ்த்துக்கள்!


Monday, October 24, 2016

நற்சிந்தனை பெறுவோம்!!

இனிய பண்டிகைக்கால நல்வாழ்த்துக்கள்!


நலமுடனும் வளமுடனும் 
பெருவாழ்வு வாழ ,

மன மாசு நீக்கி , 
நற்சிந்தனை பெறுவோம்!!


Wednesday, August 31, 2016

வீடுகளில் அவசியம் இருக்கவேண்டிய சில மூலிகைகள்!

மூலிகைகள் !


தரமான மூலிகை மருந்துகள் , உங்கள் ஆரோக்கியத்தின் அடையாளம்!


வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய சில மூலிகை மருந்துகள்!


1. திரிபலா சூரணம் -   உடல் இளமை மற்றும் ஆரோக்கியத்திற்கு.

2. கடுக்காய் சூரணம்- மலச்சிக்கல் தீர - உடல் நலம் பேண.

3.திப்பிலி - சளி தொல்லை தீர - இரசம் செய்யலாம் அல்லது மிளகு சேர்த்து சூடாக்கி பருகலாம்.

4. கற்பூரவள்ளி இலை அல்லது தைலம் - தலைவலி, மூக்கடைப்பு மற்றும்        குறட்டை தீர.

5.காலை இஞ்சி, மதியம் சுக்கு உணவில் சேர்த்தும் இரவில் கடுக்காய் பொடியை உணவுக்குப்பின் உண்டு  வர, உடல் வலிமையும், பொலிவும் பெறும். நோய்கள் அகலும்.

6.பிரண்டையை பொடி செய்தோ அல்லது துவையல் செய்தோ உண்டு வர, மூட்டு  வலியும் உடல் வலியும் விலகும்.

மேலும் தேன், இந்துப்பு அவசியம் வீட்டில் இருக்க வேண்டியவையாகும்.

Monday, August 22, 2016

மூலிகைக் காற்று

மூலிகைக் காற்று மணக்கும் கொல்லிமலை!





            மனதிற்கும், உடலுக்கும் ஒருங்கே , உற்சாகமும் ஊக்கமும் அளிக்கவல்ல இடங்களில் , மலை சார்ந்த இயற்கையின் அற்புதங்களில் ஒன்றே, கொல்லிமலை.


  மூச்சு முட்ட பெட்ரோலிய வாகனங்களின் கரியமில மாசுக்காற்றினில் , வாழ்வினைக்கழிக்கும், நகர வாழ்க்கையின் வெகுதூரத்தே, நவீன உலகம் இன்னமும் கைவைக்காத இடந்தனில், அமைந்துள்ளது, கொல்லிமலை!


          மூலிகைக்காற்றினில், இயற்கையை சுவாசித்திட, வாகன மாசுக்கள்  இன்றி , வாகன இயந்திரங்களால் ஏற்படும் இடைவிடா  இரைச்சல் இன்றி, இயற்கையை இயற்கையோடு இணைந்து அனுபவித்திட, வாழ்ந்திட, இதமான தென்றலாகத் தவழ்ந்துவரும் மூலிகைக்காற்றினில், உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றிட, மனதில் அமைதி நிலவிட,  

இயற்கை அன்னையின்  அற்புதக் கொடையாம், அரப்பளீஸ்வரர் உறையும் பழம்பெரும் சிவாலயம் கொண்ட,  கொல்லித்தாய் காத்து நிற்கும், அமைதி தவழும் கொல்லிமலை  தரிசிப்போம்! இயற்கையோடு இணைந்து,  நல்லனுபவம் பெறுவோம்! 



செல்லும் வழித்தடம் : 

நாமக்கல் அல்லது சேலம் வழியாகச் செல்லலாம்!

Sunday, July 10, 2016

கால வெளியிடை !




    சிந்தையில் கொண்ட மன எழுச்சியினால், மீண்டும் 'ஒரு வினாடி' வலைத்தளத்தின் பதிவுகளின் மூலம் மன ஊக்கம் பெறப் பணித்த இறையை பிரார்த்தித்து , பதிவுகளின் இடுகை , இறைக்கு  சமர்ப்பணம் !  

          மீண்டும் , பொலிவுடன் , புதிய பதிவாக்கங்கள்  , சீரான இடைவெளியில் வாசிக்கக்கிடைக்கும்!

வாருங்கள்!  தமிழ் வாசியுங்கள்! தமிழை சுவாசியுங்கள்! போற்றுங்கள்!!

ஆக்கமும் ஊக்கமும் , என்றும் எப்போதும் , அன்னைத்தமிழே!


வாழ்க மானிடம்!   வளர்க மனித நேயம்!!


என்றும் மாறாப்  பேரன்புடன்,

ஞானகுமாரன்.



Thursday, January 14, 2016

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



அன்பர் அனைவருக்கும் 
உளங்கனிந்த 
தமிழர் திருநாள் 
தைப்பொங்கல் 
நன்னாள் நல்வாழ்த்துக்கள்!

- ஒருவினாடி -


Total Pageviews